Flood Relief: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 


வெள்ள நிவாரண அறிவிப்பு


சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் அண்மையில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ. மழை பொழிந்தது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்து தீர்த்த மழையால், லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தும், தண்ணீர், மின்சாரம் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.


வெள்ளநீருடன், கழிவுநீரும் கலந்து வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நாசமான சம்பவமும் நடந்தது. 20-க்கும் மேற்பட்டோர் மிக்ஜாம் புயலால் பலியாகினர்.  இந்நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,00,000 வழங்கப்பட உள்ளது. அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்கு  ரூ.8,000 வழங்கப்பட உள்ளது. 


யார் யாருக்கு கிடைக்கும்?


இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  தனி நபர் குடும்ப அடைக்கும், புதிதாக ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசிப்பவர்களே.


இதனால் 1.11 கோடி மக்களுக்கும் மேல் உள்ளவர்கள் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர். இவர்களால் நிவாரணத் தொகையைப் பெற முடியுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழக அரசு சார்பிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே,  யார் யாருக்கு நிவாரண தொகை கிடைக்கும் என்ற பட்டியில் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


எப்போது கிடைக்கும்?


இந்நிலையில், வெள்ள நிவாரண தொகை மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது குறித்து விளையாட்டு நலத்துறை  அமைச்சர் உதயநிதி இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும். முதலில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, நிவாரண தொகை கொடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். சில இடங்களில் ரேசன் கடைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், ரேசன் கடைகளில் தண்ணீரை வெளியேற்றிவிட்டு, ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும்” என்றார். 




மேலும் படிக்க


வெள்ள பாதிப்புகள் குறித்து பேச தார்மீக உரிமையில்லை - இபிஎஸ் மீது அமைச்சர் சுப்பிரமணியன் விமர்சனம்!