தென்மாவட்டங்களில் கனமழை:


தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டது. அதி கனமழையால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.  அதிகனமழையால் எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளித்தது.  


பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.  இந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவராணம் அறிவித்துள்ளார். 


நிவாரணம் அறிவிப்பு:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தென்மாவட்டங்களை புரட்டி எடுத்தது. இந்தநிலையில்,  சென்னையில் அறிவித்தது போலவே  தென்மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, தென்மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும்.  நெல்லை, தூத்துக்குடியில் கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகா மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும். கன்னியாகுமரி, தென்காசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும்.


நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும்.  வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும்.  முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


எப்படி பெறுவது?


பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையை ரேசன் கடைகளில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம். ரேசன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த நிவாரணம் தொகை 10 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேசன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை படிவும் வழங்ப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  தென்மாவட்டங்களில் அதிகம் பாதித்த தாலுகா மக்களுக்கு தான் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. 




மேலும் படிக்க


Flood Relief Fund: மழை பாதிப்பு! நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!