தரையிறங்க முடியாத விமானங்கள்:


சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திரும்பிச் சென்ற விமானங்களின் எண்ணிக்கை 6லிருந்து 9 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஒரு சர்வதேச விமான சேவை திருப்பி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக ஏற்கனவே ஆறு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திரும்பிச் சென்ற நிலையில், தற்போது மேலும் மூன்று விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் திரும்பிச் சென்றுள்ளன.


பயணிகள் அவதி:


திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய மூன்று விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், இந்த 3  விமானங்களும், ஹைதராபாத்திற்கு திரும்பிச் சென்றன.


மேலும் பல விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்தபடி இருக்கின்றன. அந்த விமானங்களும் இன்னும் சிறிது நேரத்தில் பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.


கரையேறிய மாண்டஸ்


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான  புயல் "Mandous" கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திராவை கடந்தது.


இது மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று நேற்று இரவு 9.30 மற்றும் நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக  அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி கரையை கடந்தது. 


இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகல் காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருக்குமரி, தென்காசி, ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.