நெய்வேலியில் உள்ள புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


தீ விபத்து:


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய அனல்மின் நிலையமான இதில் ஆண்டுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 5 அனல்மின் நிலைய அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். 


இதனிடையே அனல் மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அலகில் பாய்லர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கின் போது நடந்த இந்த விபத்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


5 பேர் படுகாயம்:


இதுதொடர்பாக அனல்மின் நிலைய தலைமை அதிகாரி கோதண்டம் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். மேலும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பலரும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில்  அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக என்.எல்.சி. அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.