அட்சய பாத்திர திட்டத்துக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியது குறித்து அப்போதைய ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது. 2018-19ஆம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது, திடீரென்று ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசியுள்ளார்.


சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சய பாத்திரம் என்ற திட்டமாக அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தியதாக பேசினார்.  


இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ”ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததால் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 வரை ரூபாய் 50 லட்சம் பணம் discretionary fund ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கு பின் திடீரென்று 50 லட்சத்தில் இருந்து 5 கோடியாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் (Discretionary power) என்ற பிரிவின் கீழ் 50 லட்சத்தை 5 கோடியாக ஆக்கியுள்ளனர். அந்த கணக்கை ஆய்வு செய்ததில், 5 கோடியில் 4 கோடி ரூபாயை அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுத்துள்ளனர்.  பூண்டு, வெங்காயம் சேர்க்காத ஒரு அமைப்பு, அவர்கள் சமைக்கும் உணவு சத்துணவு கூட இல்லை, அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, நம்  குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக பணத்தை பெற்றுள்ளனர்.  மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்குக்கு கண்ணுக்கு தெரியாத கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. 


மீண்டும் அடுத்தாண்டு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு,  அதில் ஒரு கோடி ரூபாய் அட்சய பாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. 4 கோடி ரூபாய் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது. ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் அரசு கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கிற்கு செலுத்தியுள்ளனர். ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பிரிவின் கீழ் பணத்தை கொடுத்துள்ளனர்.  அதில் கணக்கை பார்த்தபோது அது அரசியலமைப்பு உட்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.  ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதியில் மற்ற கணக்கிற்கு மாற்றுவது சரியல்ல என சி.ஏ.ஜி பலமுறை எச்சரிக்கை  விடுத்தும் இதுபோல நடந்துள்ளது. 


5 கோடி ரூபாயை எந்த காரணம் இல்லாமல் மறைமுகமாக மாற்றப்பட்டது ஜனநாயக மரபில் கிடையாது. இது நல்ல திட்டமே இல்லை. 500க்கும் 1000 ரூபாய்க்கும் மானிய கோரிக்கையில் சட்டசபையில் ஒப்புதல் பெற்று வருகிறோம்.  ஆனால் 5 கோடி ரூபாயை யாருக்கும் சொல்லத் தேவையில்லாத கணக்கில் மாற்றி செலவழிக்கும் நிலை என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா? என ஆவேசமாக பேசினார்.  


அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்பது பள்ளி மாணவர்களுக்கு உணவளிப்பதற்காக வழங்கப்பட்டது, மாணவர்களுக்கு உணவளிப்பது தவறா, என்று கேள்வி எழுப்பினார்.  


அப்போது விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மொத்தத்தில் பார்த்தால் இதில் ஆளுநர்(அப்போதைய ஆளுநர்) தான் பதில் சொல்ல வேண்டும், என்றார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.