பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சி பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாக இருந்த நிலையில், புதுச்சேரியில் இன்று அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். 


இவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன் கைதானார். 


கனல் கண்ணன் : 


சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில்  பணியாற்றிய கனல் கண்ணன்,பல படங்களில் சண்டை காட்சிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். 1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் படத்தில் அறிமுகமான அவர் 2017 ஆம் ஆண்டு கடைசியாக குருதிப்பூக்கள் என்ற படத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக பணியாற்றியிருந்தார். இதற்கிடையில் சங்கரன்கோவில், சற்றுமுன் கிடைத்த தகவல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடத்துள்ளார். 


இதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்து முன்னணி நிறுவனத் தலைவரான ராமகோபாலன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். 


நடந்தது என்ன.. ? 


தொடர்ந்து இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்ட கனல் கண்ணன் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று பேசியுள்ளார். அந்த வகையில், இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கட்ந்த ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.


இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.


இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணன் கேட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண