தமிழ்நாட்டில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்படி, சேலம் மண்டலத்திற்குட்பட்ட ஆய்வு கூட்டம் இன்றும், நாளையும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கார் மூலம் அஸ்தம்பட்டிக்கு வரும் முதல்வர், ஆய்வு மாளிகையில் ஒய்வெடுக்கிறார். பின்னர், இன்று காலை 10:30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதல்வர், விவசாயிகள் மற்றும் தாட்கோ திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது தளத்தில் நடக்கும் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.



இன்றிரவு சேலத்தில் தங்கும் முதல்வர், நாளை காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், மா.சுப்பரமணியன் முன்னிலையில், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கிடையே, நாளை காலை பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை, முதல்வர் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சேலம் அரசு மருத்துவமனை, மாநகரில் உள்ள ஓரிரு காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், ஓரிரு ரேஷன் கடைகள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்ந்து, முதல்வர், திடீர் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



முதல்வர் வருகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை மேற்கு மண்டல சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாவட்ட எஸ்பி சிவக்குமார் ஆகியோர் நேற்று காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மாநகர பகுதிக்கு வரும் பாதையில் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டனர். இதேபோல், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகை, கூட்டம் நடைபெறும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் அனைவரும், தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாநகர காவல் ஆய்வாளர் நஜ்முல் ஹோதா தலைமையில், சேலம் உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.