இந்தியாவின் முக்கியமான நகரமாகவும், தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் திகழ்வது சென்னை. சுமார் 1 கோடி அளவு மக்கள் வசிக்கும் சென்னை இந்தியாவின் பழமையான நகரமும் ஆகும். தொழில்நுட்ப வளர்ச்சியும், கட்டுமான வளர்ச்சியும் மேம்பட்ட நகரமாக சென்னை இருந்தாலும் பெருமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் சென்னை மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகிறது.

வட சென்னையை வாட்டி வதைக்கும் பேரிடர்:


சமீப ஆண்டுகளாக சென்னை எதிர்கொண்ட புயல் மற்றும் பெருமழையை கணக்கில் எடுத்துக் கொண்டாலே சென்னை சந்திக்கும் சவால்களை நாம் அறிந்து கொள்ள முடியும். சமீப ஆண்டுகளாகவே ஆண்டுக்கு ஒரு முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை புயல், பெருமழையை எதிர்கொண்டு வருகிறது. இதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தண்ணீர் பல இடங்களில் தேங்குவதை தவிர்க்க இயலவில்லை.





சென்னையில் பெருமழை, புயல் என்று போன்ற இயற்கை பேரிடர் வந்தால் அதிகளவு பாதிக்கப்படுவது வட சென்னையே ஆகும். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட உண்மையான சென்னையாக வட சென்னையையே வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால், வட சென்னையில் மழை பெய்தால் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியும் வீடுகளை மழைநீர் சூழ்ந்தும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.


ஃபெஞ்சால் புயலால் வெள்ளக்காடு:


சென்னையை கடந்த சில தினங்களாகவே மிரட்டி வரும் ஃபெஞ்சால் புயலால், இந்த முறை அதிகளவு சிரமத்தை வட சென்னை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, வட சென்னையின் முக்கியமான பகுதிகளான புளியந்தோப்பு, பட்டாளம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.






வெள்ளம்போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் இந்த மழைநீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பலரும் கடந்த 30 ஆண்டுகளாகவே இந்த பகுதியில் இதுபோன்று நிலை நீடிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வருகின்றனர்.


நிரந்தர தீர்வு எப்போது?


ராயபுரம், திரு.வி.க. நகர், காசிமேடு, வேப்பேரி, மூலக்கடை, சூளை, ஓட்டேரி, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, என்.கே.பி. நகர், தாசமாகான் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் வெள்ளம்போல தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் எப்போதும் மழை பெய்தாலும் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல தேங்கி நிற்கிறது. பெருமழை, வெள்ளம் போன்ற நெருக்கடியான சூழலில் இந்த பகுதிகளில் மழைநீர் வீடுகளில் தண்ணீர் புகும் நிகழ்வும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.


வட சென்னையின் இந்த துயரத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வட சென்னை திட்டமிடப்படாமல் உருவாக்கப்பட்டதும், அப்பகுதியில் கட்டிட அமைப்புகள் மிகவும் சிக்கலான வகையில் இருப்பதுமே இதற்கு காரணம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும், வட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து சந்திக்கும் துயரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை என்பதால் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கடந்தாண்டு வீசிய மிக்ஜாம் புயலால் வட சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் இடுப்பளவு தேங்கியதுடன், தண்ணீர் வடியவும் நீண்ட நாட்கள் ஆகியதும் குறிப்பிடத்தக்கது.