வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரி அருகே கரையை கடந்த இந்த புயலால் புதுச்சேரி தண்ணீரில் மிதக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 50 செ.மீட்டர் அளவு மழை பெய்தது. இதனால், திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் ரயில் தண்டவாளங்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி இருப்பதால் குறிப்பாக விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
- சென்னை எழும்பூரில் இருந்து – நாகர்கோயில் செல்லும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வந்தே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து 7.45 மணிக்கு புறப்பட இருந்த நிலையில் அந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் பாசஞ்சர் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை செல்லும் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் இருந்து எழும்பூர் வரை வரும் பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மதுரையில் இருந்து எழும்பூர் வரும் வரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலே கூறிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- தஞ்சையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி அனுப்பபட்டது. இதனால், இந்த ரயில் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கவில்லை.
- மங்களூரில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு புறப்பட்ட ரயில் விழுப்புரம், காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டு எழும்பூர் வந்தது. இந்த ரயில் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கவில்லை.
- காரைக்காலில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு தாம்பரம் வந்த ரயில் விழுப்புரம், காட்பாடி ரயில் நிலையம் வழியாக வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிற்கவில்லை.
- செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு நேற்று மாலை புறப்பட்டு வந்த சிலம்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் விழுப்புரம், காட்பாடி வழியாக மாற்றிவிடப்பட்டு சென்னை வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிற்கவில்லை.
முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி பகுதியில் இன்னும் மழைநீர் வடியாததால் இன்று மாலை முதல் தென்மாவட்டத்திற்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.