தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுவையிலிருந்து கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று (30-11-2024) மதியம் சூறவாளி புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அதிகளவிலான சூறைக்காற்று வீசி வருகிறது மேலும் கடல் வழக்கத்திற்கு மாறாக அதீத கொந்தளிப்புடன் சுமார் 8 அடி உயரம் வரை கடல் அலைகள் சீறிப் பாய்கின்றன இதனால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மீனவர்கள் தங்களின் படகு மற்றும் மலை உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக இருக்க புயல் பேரிடர் பாதுகாப்பு மையங்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
பொதுமக்கள் கனமழை தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க உதவி எண்களான கட்டணமில்லாமல் அழைப்பு எண் 1077, புகார் தொலைபேசி எண்: 04146 - 223265, வாட்ஸ்ஆப் எண் 7200151144 தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பாக கடலோரப் பகுதிகளாக இருக்கக்கூடிய, புதுச்சேரி மரக்காணம், கல்பாக்கம் மாமல்லபுரம், உள்ளிட்ட பகுதிகளில் காற்று அதிகமாக வீச தொடங்கி இருப்பதால் மழையும் பெய்ய தொடங்கியுள்ளது. இந்தநிலையில் காற்று வேகமாக வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டிக்கவும் மின் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காற்றின் வேகத்திற்கு ஏற்ப தேவையான இடங்களில் மின்சாரத்தை துண்டிப்பதற்காகவும் அதே போன்று புயல் தரையை கடத்தப் பிறகு உடனடியாக மின்சாரத்தை கொடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் காற்றின் மேகத்தைப் பொறுத்து மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மரக்காணம் மற்றும் வானூர் வட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில் கனமழை பெய்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை அனைத்துறை சார்ந்த அலுவலர்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை, தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலத்தில் கனமழை அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான முறையில் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் கனமழை பெய்தால் உடனடியாக அப்பகுதி மக்களை சம்மந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி அளவில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கும் பட்சத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளில் மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கான மரம்வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் மூலம், மின் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரி செய்வதற்கான மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில், மின் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், போதிய மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்குபைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் போதிய மாத்திரை மற்றும் மருந்துகள் இருப்பு வைத்திடவும், பேரிடரின் போது தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.