வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியையும் சிதைத்துள்ளது. நேற்று இரவு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும் பாண்டிச்சேரி அருகே கடந்த 6 மணி நேரமாக நகராமல் நிலைகொண்டுள்ளது.
விழுப்புரத்தில் 49 செ.மீட்டர்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் சென்னையை காட்டிலும் விழுப்புரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 30ம் தேதி முதல் இன்று காலை வரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் அதிகபட்சமாக 49 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. பாண்டிச்சேரியில் 46.95 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் 17.9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலையில் 17.65 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 11.52 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10.46 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 9.25 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 8.7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தத்தளிக்கும் விழுப்புரம், கடலூர்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம்போல மழைநீர் ஓடியது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 49 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. திண்டிவனத்தில் மழைநீர் வடியாமல் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
விழுப்புரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி அந்த மாநில பேருந்து நிலையமே மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அதன் அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்திலும் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
நிவாரண முகாம்களில் மக்கள்:
கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. இதனால், மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தண்ணீரில் தத்தளித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே மாற்றப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரியிலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் வீடுகளில் சிக்கியுள்ள மக்களை படகுகளில் மீட்பு பணியினர் மீட்டு வருகின்றனர்.