Fenjal Cyclone Damage: ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டிய கனமழையின் விளைவாக, தமிழ்நாட்டில் நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்:
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஒருவழியாக, புதுச்சேரி அருகே சூறைக்காற்றுடன் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. புயலாக வலுப்பெறாது, பெரும் மழை இருக்காது, தென் மாவட்டங்களை தாக்கும் என, மாறி மாறி வானிலை எச்சரிக்கைகள் வெளியாகின. ஆனால், இறுதியால் வலுவான சூறாவளிக்காறு நிறைந்த புயலாக சென்னைக்கு மிக அருகாமையில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்ல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 7 வடமாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று இரவு நிலவரப்படி 22 செ.மீ., மழை கொட்டியது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதங்கள்:
- அதி கனமழை காரணமாக வடமாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதலே மழை தொடங்கிய நிலையில், நேற்று பிற்பகல் வரை கனமழை கொட்டி தீர்த்தது
- சென்னையில் சாலைகள் மழைநீரில் மூழ்கியதோடு, பிரதான சாலைகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன
- சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றவர்களின் வாகனங்கள் கூட நடுவழியில் பாதியில் பழுதாகி நின்றன.
- சூறைக்காற்று வீசியதால் சாலைகளின் குறுக்கே போடப்பட்டு இருந்த தடுப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன
- வழக்கம்போல தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்
- தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது
- வடசென்னையில் பல பகுதிகளில் இடுப்பளவிற்கு தேங்கியதால் பொதுமக்களின் உடைமைகளும் சேதமடைந்தன
- மேடான இடங்களில் தண்ணீர் வடிந்தாலும், தாழ்வான பகுதிகளில் தற்போது வரை தண்ணீர் வடிந்தபாடில்லை
- பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததை அடுத்து, மாநகராட்சி நிர்வாகிகள் அவற்றை அப்புறப்படுத்தினர்
- பிரதான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அவற்றை வெளியேற்றும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன
- சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகளில் பொதுபோக்குவரத்து முடங்கியது
- பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் மெட்ரோ ரயிலில் குவிந்தனர்
- பொதுப்போக்குவரத்து முடங்கியதால் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்
- வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன
- சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் நேற்று கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டன
- கனமழை காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டன
- புயல் கரையை கடக்கும் வேலையில் சென்னை விமான நிலைய சேவைகள் ரத்து செய்யப்பட்டன
- பல இடங்களில் மருத்துவமனைகளில் கூட மழைநீர் புகுந்ததால் நோயாளிகளில் அவதியுற்றனர்
- கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே மின்சாரமும் துண்டிக்கப்பட்டது
- சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்
நள்ளிரவில் புயல் கடந்ததால், சூறாவளிக்காற்றல் ஏற்பட்ட மற்ற சேதங்கள் தொடபான தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தான் முழுமையாக தெரியவரும்.