ஓசூர் மலர் சந்தையில் ஆயுதபூஜையையொட்டி சாமந்தி பூ விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சீசனுக்கு தகுந்தது போல் பூக்கள் சாகுபடி செய்து, அதனை ஓசூர் மலர்சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். மலர்சந்தையிலிருந்து  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.  இதே போல்  ஆயுதபூஜைக்காக  சாமந்தி பூ, பட்டன் ரோஜாவை, செண்டுமல்லி  சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

 

இந்நிலையில் சீதோசன நிலையின் காரணமாக சீசனுக்கு முன்னேரே பூக்கள்  விளைச்சல் அதிகரித்ததாலும், திருமணம்  மற்றும் பண்டிகை சீசன் இல்லாததால் கடந்த சில வாரங்களாக சாமந்தி மற்றும் பட்டன் ரோஜா ஒரு கிலோ ரூ,10 க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை  சாலையோரங்களிலும், கால்நடை மேய்ச்சலுக்கு விட்டனர்.  ஒரு சில விவசாயிகள் ஆயுதபூஜைக்கு விலை  உயரும் என காத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஆயுதபூஜை  என்பதால்,  ஓசூர் மலர்சந்தையில் சாமந்தி மற்றும் பட்டன் ரோஜா விலை  கடந்த இரு தினங்களாக  விலை உயர தொடங்கி நேற்று முன்தினம் ஒரு கிலோ சாமந்தி, ரூ.200 முதல் 300 வரையும், பட்டன் ரோஜா ரூ.240-க்கும் விற்பனையானது. அதே  போல் விலையே இல்லாத செண்டுமல்லி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ, 200 முதல் 250 வரைக்கும் விற்பனையானது.   



 

பூக்களின் விலை உயர்வால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தளி, பாகலூர், மதகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்த சாமந்தி, பட்டன் ரோஜா ஆகிவற்றை ஆர்வத்துடன் பணி ஆட்களை வைத்து இரவு, பகலாக அறுவடை செய்து  ஓசூர் மலர்சந்தைக்கு  கொண்டு வந்தனர்.  பூக்களை வாங்க உள்ளூர் மற்றும் கர்நாடக மாநில சில்லரை வியாபாரிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

 

இது குறித்து விவசாயிகள் கூறும்  போது, ”ஆயுத பூஜையொட்டி  ஓசூர்  சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் சீதோசன நிலை மாற்றத்தால்  விளைச்சல் அதிகரித்தது. ஆனால்  பண்டிகை மற்றும் திருமண சீசன் இல்லாததால், சாமந்தி மற்றும் பட்டன் ரோஜாவை மலர்சந்தையில் கேட்பதற்கே ஆட்கள் இல்லாமல் சாலையோரங்களில் கொட்டி சென்றோம். ஒரு சில பகுதியில் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக சாமந்தி பூ விலை உயர தொடங்கியது.  கடந்த ஆண்டு ஆயுத பூஜையைவிட இந்தாண்டு எதிர்பார்க்காத அளவிற்கு  நல்ல விலை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினர்.