காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராசிமணல் எனும் பகுதியில் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட சட்டப்பேரவையில் வலியுறுத்த கோரி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் மனு அளித்தனர். 


சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை சந்தித்த விவசாயிகள் ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி வலியுறுத்த வேண்டும். ராசி மணலில் அணை கட்டுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட்ட கணக்கு காட்டுவதாகவும், தற்போது அந்த உபரிநீரை தடுக்கவும் மேகதாதுவில் அணைகட்ட முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இதனை தடுத்து ராசிமணல் எனும் பகுதியில் அணை கட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு உபரி நீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் கர்நாடகாவில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.



தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ராசி மணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் இதை மேற்கோள் காட்டி கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிக்கும். ஆனால் எந்தவித அனுமதியும் இன்றி காவிரி ஆற்றில் நடுவே கர்நாடகா அரசு 5 அணைகளை கட்டியுள்ளது. மேலும் ராசி மணல் பகுதியில் அணை வைப்பது தொடர்பாக கர்நாடகா மாநில விவசாயிகளுடன் பேசி ஒப்புதல் பெற்ற பிறகு ராசி மணல், ஒகேனக்கல், மேட்டூர் அணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம். ராசி மணலில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது.


காவிரி நீரை தமிழகத்தில் வீணடிக்கின்றனர் என்று கர்நாடகா அரசு கூறி வருகிறது. முற்றிலும் தவறான கருத்து. ராசி மணலில் அணை கட்டினால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பயன்படுத்தும் வகையில் அமையும். மேலும் தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆதரவு திரட்ட உள்ளதாக கூறினார். அதற்கு முதற்கட்டமாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளோம். நாளை திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றார். குறிப்பாக நடிகர் விஜய் சந்தித்து விவசாயிகள் நிலை குறித்து தெரிவித்து ஆதரவு திரட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.


https://tamil.abplive.com/news/tamil-nadu/a-new-dam-to-be-built-in-tamil-nadu-will-kamarajar-kamarasar-rasimanal-dam-project-be-completed-199012/amp


தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாததால் தமிழ்நாட்டில் விவசாயத்தை ஒழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றிவிட்டு இங்கிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.