வெண்டைக்காய் என்றாலே நம் அனைவருக்கும் பச்சை நிறத்தில் பளபளக்கும் காய் தான் நினைவுக்கு வரும். ஆனால் சிவப்பு நிறத்திலும் வெண்டைக்காய் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியவே தெரியாது. அப்படியே மார்க்கெட்டில் சிவப்பு நிற வெண்டைக்காய் கிடைத்தாலும் கூட அது ரொம்பவே விலை அதிகமாக இருக்கும்.


சிவப்பு வெண்டைக்காய் நன்மைகள் என்ன?


இந்த சிவப்பு நிற வெண்டைக்காய் குறித்த இந்திய கண்டுபிடிப்பு வெற்றி அடைய 23 வருடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அறியப்பட்டது என கூறப்படுகிறது. சிவப்பு நிற வெண்டைக்காயை உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் தான் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


சிவப்பு வெண்டைக்காயில் இருக்கும் இரும்புச் சத்து, கால்சியம் சத்துகள், இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், உடலில் படியும் கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கவும் சிவப்பு வெண்டைக்காய் உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்றங்கள், இதய பிரச்சனைகளைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 


எங்கே விளைச்சல் அதிகம்?
சிவப்பு வெண்டைக்காய் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விளைகிறது.  இப்போது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சிவப்பு வெண்டைக்காயை விளைவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். 


இது குறித்து சிவப்பு வெண்டைக்காய் விளைவிக்கும் பாண்டியன் என்ற இளைஞர் கூறுகையில், "இப்போதெல்லாம் சிவப்பு வெண்டைக்காயை விற்பனை செய்வதில்லை. அவற்றை நான் விதைகளுக்காகவே விளைவிக்கிறேன். இவை அரிதாகி வருகிறது. கறுப்பு வெண்டைக்காய், நீல நிற கத்தரி என நூறு வகையான அரிதான காய்கறிகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க நான் முயற்சித்து வருகிறேன். அடுத்த முறை நான் சிவப்பு வெண்டைக்காயை விளைவித்து அதை நியாயமான விலையில் விற்பனை செய்வேன்.


சிவப்பு வெண்டைக்காயில் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் உள்ளன. அவற்றில் புரதம் இருக்கின்றது. அது தசை வளர்ச்சிக்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். சிவப்பு வெண்டைக்காயில் இரும்புச் சத்து, பொட்டாசியம், புரதம், கால்சியம், நார்ச்சத்து ஆகியன இருக்கின்றன. இது கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கக் கூடியது. கருவில் உள்ள சிசுவுக்கு அது நன்மை செய்யும் என்றார்.


மாரிமுத்து என்ற விவசாயி கூறுகையில், இந்த வகை சிவப்பு வெண்டைக்காய் பருவமழை காலத்தில் நன்றாக வளரும். வெயில் காலத்தில் வதங்கிவிடும். கோவை, திருப்பூர் விவசாயிகள் இப்போதே இந்த வெண்டைக்காய்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது இவை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. 2 மாதங்கள் வரை விளைவிக்கலாம் அறுவடை செய்யலாம். பச்சை வெண்டைக்காயை ஒப்பிடுகையில் இதை அதிக காலத்திற்கு விளைவிக்க முடியும். 


எனவே பாரம்பரிய காய்கறியான சிவப்பு வெண்டைக்காயை விளைவிக்க நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.