நிச்சயமாக மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என  தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ் மாசிலாமணி கூறியுள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ் மாசிலாமணி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரி  கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழக அரசு கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை பாராட்டுகிறோம். அதுபோல உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை பாராட்டுகிறோம். 

Continues below advertisement

அதே நேரத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையிடலாம். இதற்கு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மேகதாது அணை கட்டுமானத்துக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சேர்த்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த விதத்திலும் இதனை அனுமதிக்க மாட்டோம். இந்த அணையை  கட்டும் இடத்தை நேரடியாக நாங்கள் சென்று பார்வையிட்டோம், நிச்சயமாக மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். எனவே காவிரி ஆணையமோ, மத்திய நீர்வள ஆணையமோ மேகதாது அணை கட்டுவதற்கான கருத்தினை பரிசீலனை செய்யக்கூடாது.

அண்மையில் பொழிந்த மழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் அறுவடை பயிர்கள் பாதிக்கப்பட்டது. இளம் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக கணக்கெடுப்புகள் செய்து நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த போதும் இதுவரை வழங்கப்படவில்லை. போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சம்பா, தாளடி பயிர்களுக்கு பயிர் காப்பீடு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

இந்த மாதம் இறுதிவரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறோம். மத்திய ஆய்வு குழுவினர் தொடர் மழைக்குப் பின்னர் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். ஈரப்பத தளர்வு தேவை என்பதை தமிழக அரசு சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், ஆய்வு குழுவினர் சென்று பல நாட்கள் ஆகி இதுவரை ஈரப்பதத் தளர்வு வழங்கப்படவில்லை. அறுவடை முடிந்து, கொள்முதல் முடிகிற நேரம் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நியாயத்தை, பங்கிட்டை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாக நாங்கள் உணர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.