உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.


தமிழர்களின் வீர விளையாட்டு 


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களில் நடைபெற உள்ளது. இன்றைய தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


 






தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில்  காலை 7.45 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின்  அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் போட்டியினை  கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.


இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 250 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 737 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.


 10சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 3 காளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.


மிரட்டிய காளைகள், அசத்திய வீரர்கள்


விதவிதமான பெயர்களில் அவிழ்க்கப்பட்ட காளைகள், வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில்  களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளிச் சென்றன.


இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்றுச் சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர்.


வரலாற்றில் முதன்முறையாக...


போட்டியின் போது திறம்பட விளையாடி மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த விஜய் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக 28 காளைகளை அடக்கி  முதல் பரிசாக 7 லட்சம் மதிப்பிலான நிசான் மேக்னைட் கார் வென்றார். 17 காளைகளை அடக்கிய  மாடுபிடி வீரரான மதுரை அவனியாபுரம் கார்த்திக்கு 2ஆவது பரிசாக HONDA SHINE பைக்கும், 13 காளைகளை அடக்கிய மூன்றாவது மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடு பரிசும் வழங்கப்பட்டது.


இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த GM காமேஷ் என்பவரது மாட்டிற்கு முதல் பரிசாக பைக்கும்,  இரண்டாவது சிறந்த காளையான வில்லாபுரம்  GR கார்த்தி என்பவரது காளைக்கு வாஷிங்மெஷின் பரிசும், மூன்றாவது பரிசாக மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரது காளைக்கு  பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியின்போது  ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் ,குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.


போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகோப்பைகளும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.


போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், 3 சிறுவர்கள் காளைஉரிமையாளர்கள் , காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயமடைந்த நிலையில் சிறுவர், காவல்துறை உள்ளிட்ட 11பேர்  சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர்.


பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு


போட்டியில் முறைகேடுகள், குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் இம்முறை டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாடுகளின் உடலில் எண்ணெய், இரசாயனப் பவுடர்கள் தேய்க்கப்பட்டுள்ளனவா என்பதை பரிசோதித்த பிறகே போட்டியில் களமிறக்கப்பட்டன. மேலும் இந்தாண்டு முதல் போட்டி முடிந்து வெளியே வரும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உள்ளதாவும் முன்னதாகத் தகவல் வெளியாகின.