கரூர் மாவட்டம் தென்னிலை அருகே  தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி என செல்வகுமார்(45) நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று முன்தினம் காருடையாபாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.




முன்னதாகவே 2019 ஆம் ஆண்டு ஜெகநாதன் மற்றும் செல்வகுமார் இடையே  முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்பட்டு அப்போது ஜெகநாதனே தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. க.பரமத்தி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை சேர்ந்த கூலிப்படையான ரஞ்சித் என்பவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணை தெரிய வந்தது. 


கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பல் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி உடலை வாங்க மறுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.




பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கியதோடு, ஜெகநாதனின் மகன்கள் கல்விக்கான உதவிகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக கூறிய குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.






தமிழக அரசு ஜெகநாதன் குடும்பத்தாருக்கு 1 கோடி நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து, காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று ஜெகநாதன் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.