கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நாளை முதல் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் புதியதாக நேற்று 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ”தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்” என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு அறிவுரை:


தொடர்ந்து, ”கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. எனவே கொரோனா வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்” என அமைச்சர் மா. சுப்ரமணியன் வலியுறுத்தினார்.


 


தமிழகத்தில் அதிகரிக்கும் தொற்று:


3 ஆண்டுகால கடும் முயற்சிகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாத்ப்பு ஒற்றை இலக்கங்களில் கொண்டு வரப்பட்டது.  ஆனால், கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தினசரி பாதிப்பு 123-ஐ எட்டியுள்ளது. இதில் 66 ஆண்கள் மற்றும் 57 பெண்கள் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கும்,செங்கல்பட்டில் 13 பேருக்கும், சேலத்தில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 27 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், 11 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.


 


தேசிய அளவில் தொற்று அதிகரிப்பு:


இந்தியாவில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509லிருந்து 15,208ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கான சிகிச்சைக்குப் பிறகு 1,390 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,69,711 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.