கொரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு சில புதிய கட்டுப்பாடுகளை நேற்று விதித்திருந்தது. கோவில் திருவிழா, மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், பேருந்துகளில் நின்று பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பேருந்துகளில் மக்கள் நின்றுகொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக, கூடுதலாக 400 பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.


தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், நின்றுகொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


சென்னை போன்ற பெருநகரங்களில் காலை, மாலை ஆகிய நேரங்களில் பேருந்துகளையே நம்பியே வேலைக்கு செல்வோர் பலரும் உள்ளனர். இதனால், அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சென்னையில் கூடுதலாக 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் பேருந்துகள் நாளை முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படவுள்ளன.