தமிழ்நாட்டின் இன்றைய ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது ஒரு புலி. நீலகிரியில் 13 வயதான ஆண்புலி இதுவரை 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதி மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே   2014, 2015, 2016ம் ஆண்டுகள் மேன் ஈட்டர் புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டன. அதேபோல 13 பேரைக்கொன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆவ்னி என்ற புலியும் 2018ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டது.




பார்ப்பதற்கு மற்றவர்களை மிரட்டும் தொனியில் இருக்கிற புலிகள் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களைக் கண்டால் விலகிச்செல்லும் குணமுடையவை. அவ்வளவு சீக்கிரம் மனிதர்களை வேட்டையாடாது. அப்படிப்பட்ட நிலையில் புலி ஏன் ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்குகிறது? மனிதர்களைத்தாக்கும் சாதாரண புலிகளுக்கும் (man killing) ஆட்கொல்லிப் புலிகளுக்கும் (man eating) என்ன வித்தியாசம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் தன்முன் தென்படும் மனிதர்களை புலிகள் எதேச்சையாக தாக்கும்போது அது மரணத்தை ஏற்படுத்தலாம். அவற்றை எதிர்பாரா மரணமாகத்தான் கருத வேண்டும். அவற்றை ஆட்கொல்லி புலிகள் என வகைப்படுத்த முடியாது. மனிதர்களைத் தேடி அலைந்து, மனிதர்களுக்காக காத்திருந்து, அவர்களைக் கொன்று அந்த உடலையும் சாப்பிடும்பட்சத்தில்தான் ஒரு புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மேலும் சில நேரங்களில் முதல் நிகழ்வின்போது பொதுவான தாக்குதலா அல்லது ஆட்கொல்லி வகை புலியின் தாக்குதலா? என கண்டறிவது சிரமம். ஆனால் 2வது முறையும்  மனிதர்களை தாக்கி கொன்றால் அந்தப் புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டதைத் தெரிந்துக்கொள்ள முடியும். 




 


வயதான புலிகள்தான் பொதுவாக ஆட்கொல்லியாக மாறும் எனக் கூறப்படுகிறது. அதற்கான காரணம் வயதான புலிகளுக்கு இளம்புலிகளைப் போல பாய்ந்தோடும் மற்ற விலங்குகளை வேட்டையாட முடியாது. இந்நிலையில் வயதான புலி எளிதில் ஒருமுறை மனிதனை சாப்பிட்டு ருசிக் கண்டுவிட்டால் தொடர்ந்து மனிதர்களையே தான் வேட்டையாடும் என கூறப்படுகிறது. மனித வேட்டைக்கு பழகிய புலிகள்தான் ஆட்கொல்லியாக மாறும் எனக்கூறப்படுகிறது. அதேபோல காயமடைந்த, கண்பார்வை குறைபாடு போன்ற உடல்நல பாதிப்புகள் கொண்ட புலிகளாலும் வேட்டையாடுவது சிரமம். அதனால் மிக எளிதில் வேட்டையாட முடிகிற மனிதர்களை வேட்டையாடி ஆட்கொல்லியாக மாறுகிறது என்றும் கூறப்படுகிறது. ஒரு புலி ஆட்கொல்லி என அறிவிக்கப்பட்டுவிட்டால் அதனைக் கொல்ல வனத்துறை முதன்மை அதிகாரி  முடிவெடுக்கலாம். அதேபோல அனுபவம் வாய்ந்த மூத்த வனத்துறை அதிகாரிகள்தான் அதனைக் கொல்ல வேண்டும்.   




ஒரு புலியின் அதிகபட்ச ஆயுட்காலம் 15 வயது. தற்போது நீலகிரி புலியான T23 க்கு 13 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள். மேலும் காயமடைந்து சோர்வுடன் திரியும் அந்தப் புலி மசினகுடி அருகே உள்ள தெப்பக்காடு வனப்பகுதியில் சிலரின் கண்களுக்கு தென்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வயோதிகம்தான்தான் டி23 புலியை மேன் ஈட்டராக மாற்றியிருக்கிறது என கூறப்படுகிறது. 


மேன் ஈட்டர் புலிகளை சுட்டுக்கொல்லாமல் உயிரியல் காப்பகங்களில் வைத்து பராமரிக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் ஆட்கொல்லி புலிகளை பூங்காக்களில் வைத்து பராமரிப்பது கடினம், அரசிற்கும் லட்சக்கணக்கில் பொருட்செலவாகும், அதனால் எந்த பயனும் கிடையாது எனவே சுட்டுக்கொல்வதுதான் சரி என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும்‘மேன் ஈட்டர்’களை காடுகளில் வைத்திருப்பது பிரச்சனைதான். அவற்றைச் சுட்டுக் கொல்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.