தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதனை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய நிலையில், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தூத்துக்குடிக்கே சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார்களோ அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் தான் வன்முறை செய்தனர் என பேட்டி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், போலீசை தாக்கியது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது என எல்லா பிரச்னைகளையும் செய்தது சமூக விரோதிகள்தான், அப்பாவி மக்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், இந்த வன்முறையை செய்தது சமூக விரோதிகள் தான் என்று எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் என கேட்டபோது ‘எனக்கு தெரியும் ; செய்தது சமூக விரோதிகள்தான் என’ என சொல்லியிருப்பார். அதோடு, எப்போதும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என கோவமாக பேசியிருப்பார்.
இந்நிலையில், சமூக விரோதிகள் யார் என்று தெரிந்த ரஜினி, அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கூட ரஜினியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தனர்.
அதன்பிறகு, அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினி, தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி வன்முறை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார்.
இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தை எழுத்து மூலமாக விசாரணை ஆணையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார். அதில் ‘தூத்துக்குடி வன்முறை சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது ; தொலைக்காட்சி பார்த்தே துப்பாக்கிச் சூடு குறித்து விவரங்களை தெரிந்துக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார். அதோடு, ’சமூக விரோதிகள் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அப்பாவி மக்கள் இதுபோன்று வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்ற காரணத்தினால் இது சமூக விரோதிகளின் செயலாக இருக்கலாம் என்று தான் கருதியதாகவும், உண்மையில் சமூக விரோதிகள்தான் இந்த வன்முறையை ஏவிவிட்டார்களா என்பது தனக்கு தெரியாது’ என்றும் கூறியுள்ளார்.