3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 


 






தொடர்ந்து, மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜியை வருகிற 20 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். 


இந்தநிலையில், அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


நீதிமன்ற காவலுக்கு பிறகு ராஜேந்திரபாலாஜியை காவலுக்கு எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறையிம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து தமிழ்நாடு போலீஸ் இவரை கைது செய்யும் முனைப்பில் தேடுதல் வேட்டையை தொடங்கியது.


மதுரை, சென்னை என தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு மட்டுமின்றி  தனிப்படை போலீசார் மற்ற மாநிலங்களையும் சல்லடை போட்டனர். குறிப்பாக பெங்களூருவில் ராஜேந்திர பாலாஜி இருக்கலாம் என தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது.


மாறு வேடத்தில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு என ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது. காரை மாற்றி மாற்றி பயணம் செய்துகொண்டிருப்பதாகவும் போலீசார் கூறினர். 


இதற்கிடையே வெளிநாடு சென்றுவிடக் கூடும் என்பதால் 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண