சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர்; ஆனால் இன்று சிறை கைதியாக இருப்பவர் பதவியை காந்தம்போல் பிடித்துக்கொண்டு இருக்கிறார். விடியல் அரசு என்று கூறிவிட்டு விடியும் முன்பு மதுக்கடை திறக்க முயற்சி செய்கிறது விடியா அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


 முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில்,  " இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கியது தமிழர்கள் தான்.  1940ல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர், ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக் கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக் கொண்டு இருக்கிறார். கோடநாடு விவகாரத்தில் (ஸ்டாலின்) His master voice ஆகா ஓ.பி.எஸ். இருக்கிறார்.  கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. அமைத்து விசாரிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை. திமுகவின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1 ம் தேதி ஓ.பி.எஸ். ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்" என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “ செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மெற்கொள்வதை தடுக்கிறார்கள்.  இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி.  முதலமைச்சரே ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்கிறார். ஆட்சி கலைந்துவிடும் என்ற பயத்தில் அவரே பேசியுள்ளார்.  அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணில் பார்க்க முடியவில்லை.  டாஸ்மாக் அரசாக, சாராய மாடல் அரசாக திமுக உள்ளது. எந்த மாநிலத்திலியாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா? தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. விடியல் விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது. எதிர்ப்பு மட்டும் தெரிவிக்கவில்லை என்றால் 7 மணிக்கே கடையை திறந்து இருப்பார்கள். அமைச்சர் முத்துச்சாமி டாஸ்மாக் நேர விரிவாக்கத்தில் எதிர்ப்பு கிளம்பியதும் அப்படி அறிவிக்க இல்லை என்று சொல்லி இருக்கிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். 


செந்தில் பாலாஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக, ”செந்தில் பாலாஜியை டெல்லிக்கு தூக்கிவிடுவார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுவிடுவார்கள்.  ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக்கொள்வோம்” என கூறியுள்ளார்.