மூலிகைக் குளியல், பத்திய சாப்பாடு என கோவை ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அரசியல் ஒரு ஹாட் சீட் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அதுவும் ரகுவரன் ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுனுக்கு சவால் விடும்போது சொல்வாரே ஒரு நாள் இந்த சீட்டில் உட்கார்ந்துபார் எத்தனை வாழ்த்து, எத்தனை திட்டு, எத்தனை ரெகமண்டேஷன், எனப் பட்டியலிட்டுப் பேசுவார். ஒருவகையில் முதல்வர் படத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் முதல்வர் பதவி மீது மக்களுக்கு ஒரு சினிமாத்தனமான எதிர்பார்ப்பு ஏற்பட்டதை மறுக்க முடியாது. ஆட்சியில் இருப்போருக்கு அரசியல் ஒருவித டென்ஷனைக் கொடுக்கும் என்றால் ஆட்சியை இழந்தவர்கள் வேறு விதத்தில் நெருக்கடிகள் வரும். அதுவும் அதிமுக என்ற பொன்விழா கண்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படி ஒரு பதவியில் இருக்கும் ஓபிஎஸ்ஸுக்கு உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு சிகிச்சை அவசியம் தானே. ஆயுர்வேதத்தின் அடிநாதமே உள்ளிருந்து ஆரோக்கியம் என்பதுதான்.
அதனால் கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலில் வந்தது உணவுக் கட்டுப்பாடு. மெனுவில் கஞ்சி, காய்கறி, பழங்கள், உப்பு, காரம் குறைவான பதார்த்தங்கள் என வழங்கப்பட்டன.
அதுமட்டுமல்லாது மூலிகைக் குளியல், ஆயில் மசாஜ், தலைக்கு மசாஜ் என பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அவர் சிகிச்சைக்கு வந்தார். 19 ஆம் தேதியன்று முதல் சிகிச்சைகள் தொடங்கின. அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சையளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுவரை ஓ.பன்னீர்செல்வம் இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் பலரும் அவ்வப்போது இதுபோன்ற ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது உண்டு. பெரும்பாலும் கேரளாவுக்குத் தான் படையெடுப்பர். அங்கு கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை தொடங்கி குமாரகோம் ஆயுர்வேத சிகிச்சை மையம் வரை நிறைய வைத்தியசாலைகள் உள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூட்டுவலிக்காக கேரள மாநிலம் குமாரகோம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை எடுத்துக் கொள்வார்.
இப்போது ஊர் ஊருக்கு ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் சில போலி நிறுவனங்களும் பெருகிவிட்டன. ஆயுர்வேதம் மகத்தானது என்றாலும் அதை தேர்ந்த நிபுணர்கள் மூலம் நாம் செய்து கொள்ள வேண்டும். பெரிய புள்ளிகள் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், மாற்று வைத்தியத்தை நாடும் போது சாமான்ய மக்கள் சரியான இடத்தில் சிகிச்சைக்குச் செல்வது சிறந்தது. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இப்போது இதுபோன்ற சிகிச்சைகளை அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.