அக்டோபர் 29ஆம் தேதி தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்க அனுமதி கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொன்விழாவையொட்டி தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியுள்ள சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுத தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிமுக பொன்  விழாவையொட்டி பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதோடு நிற்காமல்,




அதிமுகவின் 50 ஆம் ஆண்டு பொன்  விழாவையொட்டி தி. நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா கல்வெட்டு ஒன்றை திறந்து வைத்தார். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.




எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து ஆட்சி  பீடத்தில் அமர்ந்த ஜெயலலிதாவுடன் சேர்ந்து பயணிக்க தொடங்கிய சசிகலா தென் மாவட்டங்களில் அதிகம் வசிக்கக்கூடிய முக்குலத்தோர் ஆதரவை அதிமுகவுக்கு பெற்று தந்து வந்தார். இதனால்  தென்மாவட்ட அதிகமுகவில்  அதிக அளவில் முக்குலத்தோர் இடம்பெற்றிருந்ததை பார்க்க முடிந்தது. மேலும், தேர்தல் காலங்களில் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜையில்  சசிகலாவுடன் ஜெயலலிதா வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல்,  முக்குலத்தோர் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 2014 அம் ஆண்டு 13.5 கிலோ எடையுள்ள   தங்க கவசம் ஜெயலலிதா  அணிவித்தார்.




இந்த கவசம் அதிமுகவின் பொறுப்பில், மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்திருக்கவும், ஒவ்வொரு ஆண்டு ஜெயந்தி விழாவின் போது, அதிமுக பொருளாளர் மூலமாக விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் ஜெயலலிதா வழிவகை செய்திருந்தார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையின் போது மதுரை வங்கியில் இருந்து பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு தேவர்சிலைக்கு அணிவிக்கப்படும், விழா முடிந்ததும் பாதுகாப்பாக மீண்டும் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படுவது வாடிக்கையாக  இருக்கிறது. ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.




தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது குரு பூஜையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக முதல்வர் உள்பட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என, பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.


இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும்  விழா ஏற்பாடுகளையும்  மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறையுடன்  இணைந்து செய்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு பசும்பொன்னில் வரும் 29ஆம் தேதி அஞ்சலி செலுத்த அனுமதி தர வேண்டும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட வி.கே சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை சென்றார்.


இது அதிமுக தரப்பில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து சசிகலா மேற்கொள்ளும்  மறைமுக பிரச்சாரமாகவே பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக முக்குலத்தோரின் வாக்குகளை அமமுக அலேக்காக பிரித்ததால், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியையே தழுவியது. எனவே மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளர் எனக்கூறி பசும்பொன்னிற்கு வரும் சசிகலாவின் வருகையானது முக்குலத்தோர் என் பக்கமே என மீண்டும்  அதிமுக தலைமைக்கு உணர்த்த அவர் எடுத்துள்ள அஸ்திரமாகவே  பார்க்கப்படுகிறது.