தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஜனவரி 4-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னை ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டமானது புத்தாண்டான 2023 பிறந்த பிறகு நடைபெறும் முதல்  அமைச்சரவை கூட்டம் ஆகும்.


அமைச்சரவை கூட்டம்:


இந்த கூட்டத்தில் வரும் 9-ந் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஆன்லைன் ரம்மி மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


தமிழ்நாட்டில் விரைவில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


மேலும், இந்த கூட்டத்தில் நேற்று தொடங்கப்பட்ட பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் கடந்த முறை போல எந்த சர்ச்சையும் எழாத வகையில் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர்  ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில், அதனை மீண்டும் அறிவுறுத்துவார் என  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிறப்பு பேருந்துகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:


மேலும், பொங்கல் பண்டிகை்காக 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கான பேருந்து வசதிகளில் எந்தவித தொய்வும், இடர்பாடும் இல்லாமல் இயக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்காக பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதி, பரிசோதனைகளை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.  விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 


மேலும் படிக்க: Polio: இதை முதல்ல படிங்க..! தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..!