AIADMK: அதிமுக வளர்ச்சியை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது என கோவையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இபிஎஸ் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும், முதலமைச்சரை பொம்மை முதல்வர் மற்றும் யோக்கிய சிகாமணி என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமியும் கலந்து கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச்செயளாலர் எடப்பாடி கே பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் பேசியதாவது: 18 மாத விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு மக்கள் வயிற்றெச்சல், கோபத்தை உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர்.
18 விடியா திமுக ஆட்சியில் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது. என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பம்தான் அடைந்துள்ளனர். ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர், திறமையில்லாத முதலமைச்சர். மேலும், ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு 18 மாத கால ஆட்சியே சாட்சி. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் கார்ப்ரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழ்நாட்டினை ஆட்சி செய்கிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி எனப் பேசியுள்ளார்.
மேலும், “சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மக்கள் மீது சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. 53 சதவீதம் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படிப்படியாக உயர்த்தலாம் ஆனால் திமுக அரசு அதனைச் செய்யவில்லை. தொழில் வளம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றிவிட்டார்கள். கம்பி, சிமெண்ட் விலை உயர்வால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும். பொய் வழக்கால் அதிமுகவை முடக்க முடியாது. அதிமுகவின் வளர்ச்சியை ஒரு ஸ்டாலின் மட்டும் இல்லை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது” எனவும் ஆவேசமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. நாம் செய்ததை தான் திமுக அரசும் செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் அதிக தார்சாலை உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமை பெற்றோம். பத்து ஆண்டு கால பொற்கால ஆட்சியில் அதிக விருதுகளை தமிழகம் பெற்றது. அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு செல்லவில்லை. வீறு நடை போட்டது. எங்களது ஆட்சியை பார்த்து எதிர்கட்சிகள் வயிறு எரிகிறது என முதலமைச்சர் சொன்னார், ஆனால் மக்கள் வயிறு எரிகிறது” என அவர் பேசியுள்ளார்.