கடந்த ஜனவரி 4 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார்.  இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


வேட்பாளர்கள் யார்? யார்?


இதேபோல் அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். பின்னர், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், ஆனந்துக்கு முரசு சின்னமும், மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது. 


இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.  


சொத்து விவரம்


இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், அவரது மனைவி பெயரில் 7 கோடியை 16 லட்சத்துக்கும், குடும்பம் சார்பில் 8 கோடியை 12 லட்சத்துக்கு சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது பெயரில் ஒரு கோடியை 29 லட்சம் ரூபாயும், மனைவி பெயரில் ஒரு கோடிய 71 லட்ச ரூபாயும், குடும்பம் சார்பில் 55 ஆயிரம் ரூபாயும் கடன் இருப்பதாக வேட்புமனுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


அதிமுக வேட்பாளர் தென்னரசு தாக்கல் செய்த வேட்புமனுவில், தனக்கு 2 கோடியை 27 லட்ச ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில் ஒரு கோடியை 78 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாகவும், தன் பெயரிலோ தனது மனைவி பெயரிலோ எந்த கடனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பானது மொத்தமாக  ரூ.14.74 லட்சமாக இருப்பதாகவும், வங்கியில் தனது பெயரில் 2 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து மதிப்பானது 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், அவரது கணவர் பெயரில் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தனது பெயரில்  4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், தனது கணவர் பெயரில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வருகிற 24,25 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.  அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 15ஆம் தேதி முதல் 5 நட்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்.


இதுதவிர கூட்டணி கட்சிகளும் களம் இறங்கி பிரச்சாரம் நடத்த இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுவதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இத்தொகுதியில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.