2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதற்கிடையே ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.


இந்தநிலையில், இன்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடரவும், முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் கைசின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 


பாஜக அண்ணாமலை ட்வீட்  குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”திருவண்ணாமலைக்கும் போக விரும்பவில்லை, அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை “என்றார்.


திருமகன் ஈவெரா, நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பி தன்னை அணுகியதாக சீமான் நேற்று பொதுகூட்டத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,” சீமான் அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கருத்துக்களை சொல்பவர். மாற்றி மாற்றி பேசும் போக்கினை சீமான் மாற்றி கொள்ள வேண்டும்” என்றார். 


மத்திய அமைச்சராக இருந்து விட்டு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவது தகுதி குறைவல்லவா என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ”கலெக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தான் விருப்பம். அதை போலவே  ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்த போதிலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தரக்குறைவாக கருதவில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். கலக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் சிறப்பாக பணியாற்றுவேன்” என்றார்.


மீண்டும் களத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்:


ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கோபிச்செட்டி பாளையும் MP-ஆகவும் இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.


காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தற்போது இருக்கும் ஈவிகேஎஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மீண்டும் சட்டமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதன் மூலம் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.