சென்னையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலினுடன் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி சந்தித்து பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆலோசனை நடத்தி வந்தனர்.
அறிவாலயத்தில் திமுக தலைவர்களுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், “2023ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து பேசி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என வெளியிடப்பட்டது.