ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில், இந்த 12 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவு:


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இதனையடுத்து ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் உள்ளனர். 


தொடங்கிய வாக்குப்பதிவு:


ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருந்த நிலையில், அதனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  


 12 அடையாள அட்டை 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில், இந்த 12 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,  புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய பேங்க் அக்கவுண்ட், போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட், பாஸ்போர்ட், மத்திய - மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, எம்.பிக்களாக இருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து தங்களது வாக்குகளை செலுத்தி கொள்ளலாம்.