ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்த தொகுதிக்கு தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக கூட்டணியில் பொதுத்தேர்தலின் போது போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக அந்த தொகுதியில் அதிமுக போட்டியிடும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ABP NADU-வுக்கு ஜி.கே. வாசன் அளித்த பிரத்யேக  பேட்டியில் விளக்கமாக பேசியுள்ளார். அதன்படி பேசிய ஜி.கே. வாசன், ”இந்த முடிவானது தமிழக மக்களின் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் வருங்கால நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணியின் முதன்மை கட்சியான தாங்கள் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டுள்ளது.


மீண்டும் தோல்வி பெறுவோம் என்பதால் போட்டியை தவிர்க்கிறீர்களா?


பொதுத்தேர்தலுக்கு, இடைதேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தின் இடைதேர்தல்களை அனைவரும் அறிவோம். அதிமுக தமிழகத்தின் முதன்மை கட்சி, முதல் கட்சி, பெரிய கட்சி. அவர்கள் பல இடைதேர்தல்களை சந்தித்து இருக்கிறார்கள், பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் முக்கியமான அரசியல் தருணம் இது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிடுக்கிறோம். இந்த நேரத்தில் முதன்மை கட்சியின் பங்கு, நிச்சயமாக கூட்டணிக்கு நன்மை பயக்கும். அதனடிப்படையிலேயே கூட்டணியின் வருங்கால நலன் மற்றும் வெற்றி உறுதிப்படுத்தப்படும் என, நாங்கள் கலந்து நன்கு பேசி கூட்டணி கட்சியின் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்.


ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட்டு அதிமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா?


ஆளுங்கட்சியை வெல்ல வேண்டும், அதற்கு தமிழகத்தின் முதன்மை கட்சி கூட்டணியில் போட்டியிடுகிறது. தமிழக ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து மக்கள் விரோத போக்கையே அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்மறை ஓட்டு அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனுடைய தாக்கத்தால் எங்களுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது.


அதிமுகவில் ஈபிஎஸ் தலைமையை ஏற்று, ஓபிஎஸ் கட்சியில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?


தமாகாவை பொருத்தவரையில் ஈபிஎஸ் பழனிசாமி தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனடிப்படையிலேயே இடைதேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமாகா தலைவர் என்ற முறையில் என்னால் இதை தான் சொல்ல முடியும். 


ஏன் ஈபிஎஸ்-ஐ ஆதரிக்கிறீர்கள்?


அதிமுக பிளவுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்து, ஆட்சியை நடத்தி, பல தேர்தல்களை சந்தித்து, அதிகாரப்பூர்வமாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து அதிமுக உடன் தான் தமாகா உள்ளது. ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்பதெல்லாம் பழைய சம்பவம். தற்போது அதிமுக தலைமை யார் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமாகா தனிக்கட்சி. எங்களுடைய நிலைப்பாட்டை அதனுடைய தலைவர் என்ற பெயரிலேயே நான் கூறுகிறேன். இடைதேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என நம்பும் முதல் நபர் நான் தான். மக்கள் மீதான நம்பிக்கையிலேயே இந்த கூட்டணி அமைந்துள்ளது


என ஜி.கே. வாசன் உறுதிபட தெரிவித்தார்.