ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்கவுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தற்போது ஆதரவு கோர இருக்கிறது. இதற்கு கமல்ஹாசன் கண்டிப்பாக பச்சைக்கொடி காட்டுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 


பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதற்கிடையே ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.


இதைத் தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.


அதைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''திமுக காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்வு செய்யச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏனெனில் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்கும். எனினும் எங்கள் மேலிடம் திமுகவிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று நம்புகிறேன். களத்தில் வேலை செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். 


மக்கள் நீதி மய்யத்திடம் ஆதரவு கோர இருக்கிறோம். ஏற்கெனவே ஈரோடு கிழக்கு திமுக தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்று சந்தித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் அழகிரியையும் சந்தித்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளேன். பரப்புரைக்கு வர முதல்வரைச் சந்தித்து அழைப்பு விடுத்தேன். முதல்வர் பரப்புரைக்கு வர வேண்டும். 


யார் வேட்பாளராக இருந்தாலும் எங்களுக்கு வெற்றி நிச்சயம். எதிர் அணியில் இருப்போர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது, போட்டியிடலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவுசெய்யவில்லை. ஏனெனில் அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்'' என்று ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.