ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் மரணம். அவரது மறைவுக்கு கட்சித் தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்தாணி பேரூராட்சி 3-வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் இறந்ததையடுத்து, அந்த வார்டில் தேர்தல் தள்ளி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மு.ஐயப்பன் (51), விவசாய தொழில் செய்து வந்துள்ளார், இவரது மனைவி சாந்திமணி மற்றும் அகிலேஷ், ஹரிஹரன் என்ற இரு மகன்கள் உள்ளனர், இவர் அத்தாணி 3-வார்டு திமுக செயலாளராக இருந்து வந்துள்ளார். வரும் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அத்தாணி பேரூராட்சியில் திமுக சார்பில் 3-வார்டு வேட்பாளராக போட்டியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் ஐயப்பன்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஐயப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வீட்டில் இருந்தோரிடம் தெரிவித்ததை அடுத்து அந்தியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஐயப்பன் இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு ஐயப்பன் உடலை உறவினர்கள் கொண்டு வந்தனர். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஐயப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இச்சம்பவம் திமுகவினர் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது