EPS: மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதலமைச்சர் எப்படி நிவாரண தொகை கேட்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 


தென்மாவட்டங்களை புரட்டி போட்ட கனமழை:


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்தது. கிட்டதட்ட இரு மாவட்டங்களிலும் ஒரே நாளில் 660 செ.மீ., மழை பெய்ததால் அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழந்தது. 


உடனடியாக தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கியது. தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இரண்டு நாட்களுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள வடிநீர் வடியத் தொடங்கியுள்ளது.


”முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை"


இந்நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.  இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான்கு மாவட்ட மக்கள் மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை  பாதிப்பு தொடர்பாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும்.  தூத்துக்குடியில் ஏற்கனவே 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றிருந்தன.


இரண்டரை ஆண்டுகளில் எஞ்சிய 15 சதவீத பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை. வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்  வழங்க வேண்டும்.  கனமழையால் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.  ” என்று வலியுறுத்தியுள்ளார். 


”உணவின்றி தவித்து வரும் மக்கள்"


தொடர்ந்து பேசிய அவர், "தென்மாவட்டங்கள் முழுவதும் இன்று ஆய்வு செய்தேன். அப்போது, அங்கிருந்த பெரும்பாலான மக்கள் மூன்று நாட்கள் உணவின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், திமுக அமைச்சர்கள் ஊடகங்கள் முன்பு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம் என்று பொய் கூறி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனியாவது மக்களுக்கு உணவு வழங்க வேண்டும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.


மேலும், ”முதல்வர் ஸ்டாலின், டெல்லிக்கு நிவாரணம் கேட்க செல்லவில்லை. மக்கள் பிரச்னைக்காக டெல்லி செல்லவில்லை. இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு தான் சென்றிருக்கிறார். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதலமைச்சர் எப்படி நிவாரண தொகை கேட்க முடியும்.  மழை பாதிப்பை கண்காணிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டும் மக்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசு மழை பாதிப்பை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார்.