CM Stalin On Governor: வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரை சந்திக்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.


டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்:


டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “பிரதமர் மோடியை சந்திக்க இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பான முழு விவரங்களையும் பிரதமரிடம் வழங்குவேன். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் உருவாக்க, உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிதி வழங்கிட பிரதமரிடம் கோர இருக்கிறேன். அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பாதிப்பிற்கான உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறேன்” என தெரிவித்தார்.  தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.


செய்தியாளர்களின் கேள்விகளும், முதலமைச்சரின் பதில்களும்:


கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட நேரடியாக செல்வீர்களா?


முதலமைச்சர் பதில்: இன்று இரவு பிரதமர் அவர்கள் சந்திக்க நேரம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், இரவு பிரதமரை பார்த்துவிட்டு நிலவரத்தையெல்லாம் சொல்லிவிட்டு, Memorandum கொடுத்துவிட்டு, நாளை காலை நேரடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கும் செல்கிறேன்.


கேள்வி: கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கோரப்பட்ட நிவாரண நிதி நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கோரப்பட்ட நிவாரண நிதி உடனடியாக கிடைக்குமா....


முதலமைச்சர் பதில்: கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஏற்கனவே, ஒன்றிய அமைச்சர்
ராஜ்நாத்சிங் அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். பிரதமருக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்றைக்கும் பிரதமரிடத்தில் இதை வலியுறுத்துகிறோம்.


கேள்வி: மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா...


முதலமைச்சர் பதில்: அதற்கு ஏற்கனவே பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.
சென்னையில் இதுவரை 47 வருடங்களாக வராத மழை, தென்பகுதியில் 60 ஆண்டு காலமாக சந்திக்காத மழை பெய்திருக்கிறது. அதனால் இது எதிர்பாராதது. இருந்தாலும் இதற்காக முன்கூட்டியே என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் நிச்சயம் அரசு செய்யும்.


கேள்வி : நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரச்சனை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து....


முதலமைச்சர் பதில்: அது உங்களுக்கு புரிந்தால் சரி. உங்களுக்கு புரிந்தால் அதை சொல்லுங்கள்.


கேள்வி : கவர்னர் தமிழ்நாட்டில் பல அலுவலர்களை வைத்து கூட்டங்களை நடத்தி வருவது குறித்தும், இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது பற்றி....


முதலமைச்சர் பதில் : கொரோனா போன்ற பேரிடர் ஏற்பட்டபோது, பிரதமர் தான் ஆலோசனை
கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால், என்ன reaction, அதே reaction-தான் இப்போது.