என்.எல்.சி நிறுவனம் இரண்டாம் சுரங்க பணிகளுக்கு விளைநிலங்களில் நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் திமுக அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி மக்களை விரட்டி அடிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 


இது தொடர்பான அறிக்கையில், ”என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாமிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.


கடந்த மே மாதம் 24ம் தேதி அன்று, அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், புவனகிரி தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆ. அருண்மொழிதேவன் அவர்களும் கலந்து கொண்டு, என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டுத்தான் நில எடுப்பு செய்யப்பட வேண்டும் என்று உறுதிபட எடுத்துரைத்தார்.


சட்டமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர், விரைவில் இதேபோல் மற்றொரு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் என்றும், அதுவரை எந்தவிதமான நில எடுப்புப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் என்.எல்.சி. நிர்வாகத்தை பணித்தார். ஆனால், தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்.எல்.சி. நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்த விடியா திமுக அரசு துணை நின்றுள்ளது.


ஏற்கெனவே, கடந்த 10.3.2023 அன்று என்.எல்.சி. நிர்வாகம் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டபோது, கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் உட்பட நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்கள் என்.எல்.சி-யின் நில எடுப்பு நடவடிக்கையினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த என்.எல்.சி. நிறுவனத்துடன் விவசாயிகளின் பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில், புவனகிரி தொகுதியில், வளையமாதேவி பகுதியில் கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த நேற்று (26.7.2023) காலை திடீரென்று 1000-க்கும் மேற்பட்ட காவலர்களின் துணையுடன் என்.எல்.சி. நிறுவனம், நெல் பயிரிட்ட நிலத்தில் இராட்சத இயந்திரங்களை இறக்கி வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விவசாயிகள் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.


'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிப்பதற்கு இந்த விடியா திமுக அரசுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில், நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்காமல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு  திட்டங்களை நிறைவேற்றாமல், தற்போது விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்.எல்.சி. நிறுவனத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.


தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புவனகிரி தொகுதிக்குட்பட்ட 37 கிராமங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளினால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து 3.1.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக ஆனவுடன், காவல் துறையின் உதவியுடன் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலங்களை கையகப்படுத்துகின்றனர்.  ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது விடியா திமுக அரசின் முதலமைச்சரானவுடன் ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடல் அரசு.


விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு: சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.