தேர்தல் களத்தில் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை கொண்ட பலம் வாய்ந்த கூட்டணியை திமுக அமைத்துள்ளது. இதனை எதிர்கொள்ள அதிமுகவும் முதல் கட்டமாக பாஜகவை தங்கள் அணியில் இணைத்தது. அடுத்ததாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் ஓரணியில் தமிழகம் எனவும், தமிழகத்தை மீட்போம்.. மக்களை காப்போம் என எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சி கால திட்டங்கள்
அந்த வகையில் ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.
உரிமைத்தொகை பற்றி எப்போதும் சொல்கிறார், அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதனால் வேறு வழியின்றி 28 மாதங்கள் கழித்து கொடுத்தார். இப்போது மக்கள் செல்வாக்கு இழந்த காரணத்தால் மேலும் 30 லட்சம் பேருக்கு விதியைத் தளர்த்தி கொடுப்பதாகச் சொல்கிறார், 5 மாதம் 5000 ரூபாய் கிடைக்கும், ஏற்கனவே 28 மாதம் போய்விட்டது, இப்போது 55 மாதம் போய்விட்டது 5 மாதம் தான் இருக்கிறது, குடும்பத்தலைவி கஷ்டப்படுவார்கள் என்ற எண்ணத்தில் கொடுக்கவில்லை, தேர்தலுக்காகக் கொடுக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தாலும் அதிமுக கூட்டணி கூட்டணியே வெற்றி பெறும்.
பட்டு வேட்டி, கான்கிரீட் வீடு- இபிஎஸ் வாக்குறுதி
ஏழை, விவசாய தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். தனிக்குடித்தனம் சென்றாலும் அருந்ததியர், ஆதிதிராவிடர் மக்களுக்கும் தனித்தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.ஏற்கனவே நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும், அந்த திருமண உதவித் திட்டத்தை நிறைவேற்றும்போது கூடுதலாக மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலையும், மணமகனுக்கு பட்டுவேட்டியும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.