அமைச்சர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எக்காரணம் கொண்டும் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்று மின் வாரியத்திடமிருந்து மின்சாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவு பறந்துள்ளது.


அண்மையில் அமைச்சர் துரைமுருகன் திமுகவுக்கு 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தினை ஒட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் பாதியிலேயே மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் துரைமுருகன் மின் வாரியத் துறை உதவிப் பொறியாளரை மேடையில் இருந்தவாறே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். மின் தடை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் தான் இப்படியொரு உத்தரவு மின் வாரியத்தில் இருந்து உயர் அதிகாரிகளுக்குப் பறந்துள்ளது. 


அதன்படி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள  மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்த நாட்களில் அமைச்சர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறதோ அன்று மின் சாதனங்கள் பராமரிப்புப் பணியினை அந்தக் குறிப்பிட்ட பகுதியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மின் விநியோகம் தடையின்றி சீராக இருப்பதை முன் கூட்டியே வலியுறுத்தி கண்காணிக்க வேண்டியது உதவிப் பொறியாளரின் பணி.


மேற்பார்வை பொறியாளர்களாக இருப்போர், மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் விவரத்தை பெற்றிட வேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும். அமைச்சர்கள் நிகழ்ச்சி ஏதும் உறுதியானால் துணை மின் நிலையத்தில் கூடுதல் ஊழியர்கள் இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்வது கட்டாயம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இபிஎஸ் கேள்வி:


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பரவலாக பல மாவட்டங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ன்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 


அதில் அவர், மின்சாரம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அரசு மக்களுக்கு மின்சாரம் வழங்க தவறிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு என்று எடப்பாடி பழனிசாமி எனக் கேள்வி எழுப்பினார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்:


இதற்கு விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோடை காலங்களை எதிர்கொள்ள கூடிய வகையில், தேவையான மின்சாரத்தை நாம் கையிருப்பில் வைத்திருக்க கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்கு அளவை கணக்கிட்டு, ஏறத்தாழ 3000 மெகாவாட் அளவிற்கு குறைந்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மத்திய தொகுப்பில் இருந்து நாம் பெற்றுவந்த மின்சாரம் திடீரென நின்றது. ஒரே நாளில் 796 மெகாவாட்   திடீரென தடைபட்டது. இதனால் மின் தடை ஏற்பட்டது. அது துரித கதியில் சரி செய்யப்பட்டது என்றார்.