Prakash raj ED: ப்ரணவ் ஜுவல்லர்ஸ் பண மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் பிரகாஷ் ராஜிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பிரகாஷ் ராஜிற்கு சம்மன்:
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ப்ரணவ் ஜுவல்லர்ஸ் சுமார் 100 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த பிரகாஷ் ராஜ், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, விரைவில் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ப்ரணவ் ஜுவல்லர்ஸ் பணமோசடி:
திருச்சியை தலைமையிடமாக கொண்ட ப்ரணவ் ஜுவல்லர்ஸ் சென்னை, நாகர்கோவில், மதுரை மற்று புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 8 கிளைகளை கொண்டு செயல்பட்டு வந்தது. அதோடு, புதிய நகை சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடையே பணத்தை வசூலித்தது. ஆனால், சொன்னபடி பலன்கள் கிடைக்கவில்லை எனவும், செய்த முதலீட்டையும் திருப்பி தரவில்லை என வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு, பணமோசடி நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு:
புகார்கள் அடிப்படையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் நடத்தும் கடைகள் கடந்த அக்டோபர் மாதம் மூடப்பட்டன. அதன் உரிமையாளர் மதன் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு, அவருக்கும், அவரது மனைவிக்கும் எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அன்று சோதனையும் நடத்தப்பட்டது. அதில், பல்வேறு குற்ற ஆவணங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.23.70 லட்சம் பணம், 11.60 கிலோ எடையுள்ள தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தங்க முதலீட்டுத் திட்டம் என்ற போர்வையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வருமானம் வரவில்லை என்பது மட்டுமல்லாமல், முதலீடு செய்யப்பட்ட தொகையும் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை போலி நிறுவனங்களில் முதலீடு செய்து ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி செய்துள்ளது. இதனை ப்ரணவ் ஜூவல்லர்ஸ் புத்தகத்தில் உள்ள சப்ளையர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான், ப்ரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு நீண்ட காலமாக விளம்பர தூதராக இருந்த, பிரகாஷ் ராஜிற்கு அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் தொடர்ந்து கடுமையான கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், அமலாக்கத்துறையின் சம்மன் அரசியல் கவனத்தையும் பெற்றுள்ளது.