கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 17 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முன்னதாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு நீதிபதிகளில் தீர்ப்பு ஒத்து போகாததால் மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது. நேற்று நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் என்.ஆர் இளங்கோ தங்களது வாதத்தை முன் வைத்தனர்.


அமலாக்கத்துறை தரப்பு வாதம்:


இன்று நடைபெறும் விசாரணையில் அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா  அஜராகி தனது வாதத்தை முன்வைத்தார்.



  • 2000-ம் ஆண்டுக்கு முன் வரை  சட்டவிரோத பண பரிமாற்றம் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இந்தியாவும் கையெழுத்திட்டு இருந்தது.

  • சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது கடமை.

  • குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, புகார், வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது.

  • காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்க துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும்.

  • ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை நடவடிக்கைகள் தான்.

  • சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும்.

  • 2005 ம் ஆண்டு சட்டம் அமலுக்கு வந்த பின் இச்சட்டத்தின் கீழ் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது.

  • அமலாகத்துறை என்பது தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பாகும். அதனால் புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது.

  • தவறான விசாரணை என்றால் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

  • வங்கி மோசடிகளைப் பொறுத்த வரையில், அமலாக்கத்துறை முயற்சியால் தோராயமாக  ரூ. 18,000 முதல் 19,000 கோடி வரை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

  • சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம்  தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. அதனால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

  • கைதுக்கு பிறகு  புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.