Minister Senthil Balaji: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் எனவும், மேலும், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர் என்பதை அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது காலை நேர நடை பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, உடனே தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ அமலாக்கத்துறையினர் எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் எனத் தெரியவில்லை, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், எனக்கு இந்த சோதனை குறித்து எந்த முன் தகவலும் வரவில்லை. அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார். மேலும், கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவும் தயார்” என கூறினார்.

  


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுகவின் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே புகாரின் பேரில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் என கூறப்பட்ட நிலையில், அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் வீட்டிலேயே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல் அவரது சகோதரட் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 


மேலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதாவது ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கருர் ராமேஸ்வரப்பட்டியில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றோர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


இதற்கு முன்னர் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் போது முதலில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர்,  வருமான வரித்துறையினருக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த முறை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.