பல்வேறு வழக்குகளில் சட்டப்போராட்டம் நடத்தி மக்களிடையே அறியப்பட்டவர் ட்ராஃபிக் ராமசாமி. வயது முதிர்ந்த காலத்திலும் இவர் எளிய மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ட்ராஃபிக் ராமசாமி இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும், இணையதளவாசிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் '#RIPTrafficRamasamy' என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பிரபலங்களும் பொதுமக்களும் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
ட்ராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ட்ராபிக் ராமசாமி என்ற படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து நடித்திருந்தார். சில தேர்தல்களிலும் ட்ராஃபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.