புதுச்சேரி புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு: யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிக்க ஆணையம் பரிந்துரை.

Continues below advertisement

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 20 பைசா வரை உயர்த்த, கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (JERC) புதுச்சேரி மின்துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வானது, அக்டோபர் 1 ஆம் தேதி முதலே கணக்கிடப்பட்டு (retrospective effect) அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் (2024-25) புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Continues below advertisement

ஜூன் மாதம் அமலான முதல் கட்டண உயர்வு

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்துறையின் வரவு-செலவு கணக்கீடுகளின் அடிப்படையில், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வு கோரப்படுவது வழக்கம். அதன்படி, 2024-25 நிதியாண்டிற்காகக் கடந்த டிசம்பர் மாதம் மின்துறை கட்டண உயர்வைக் கோரியது.

இதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் புதுச்சேரி வந்த ஆணையத்தின் உறுப்பினர்கள், பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினர். வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் கட்டண உயர்வு, இந்த ஆண்டு சற்று தாமதமாகக் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

ஜூன் 16 முதல் அமலில் உள்ள கட்டண விவரம் (வீட்டு உபயோகம்):

0-100 யூனிட் வரை: ரூ. 2.25 லிருந்து ரூ. 2.70 ஆக உயர்ந்தது.

101-200 யூனிட் வரை: ரூ. 3.25 லிருந்து ரூ. 4.00 ஆக உயர்ந்தது.

201-300 யூனிட் வரை: ரூ. 5.40 லிருந்து ரூ. 6.00 ஆக உயர்ந்தது.

300 யூனிட்டுக்கு மேல்: ரூ. 6.80 லிருந்து ரூ. 7.50 ஆக உயர்ந்தது.

அரசு மானியம் மற்றும் தற்போதைய 2வது உயர்வு

ஜூன் மாத கட்டண உயர்வுக்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, புதுச்சேரி அரசு மின் கட்டண மானியத் திட்டம் ஒன்றை அறிவித்தது. அதன்படி, வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 45 பைசா வரை மானியம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட கட்டணத்தின் மீது, தற்போது மீண்டும் ஒரு சிறிய உயர்வுக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது அக்டோபர் 1 ஆம் தேதி மின் பயன்பாட்டிலிருந்தே அமலுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய கட்டண விவரம்:

0-100 யூனிட் வரை: ரூ. 2.90 (தற்போதைய கட்டணம் ரூ. 2.70)

101-200 யூனிட் வரை: ரூ. 4.20 (தற்போதைய கட்டணம் ரூ. 4.00)

201-300 யூனிட் வரை: ரூ. 6.20 (தற்போதைய கட்டணம் ரூ. 6.00)

301-400 யூனிட் வரை: ரூ. 7.70 ( 300 யூனிட்டுக்கு மேலான தற்போதைய கட்டணம் ரூ. 7.50)

 

ஒவ்வொரு அடுக்கிலும் (slab) யூனிட் ஒன்றுக்குச் சரியாக 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது இரண்டாவது கட்டண உயர்வாக வந்துள்ளது, நுகர்வோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.