மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற புஸ்ஸி ஆனந்த், தேவர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் வெல்க என கோஷமிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேவர் ஜெயந்தி விழா:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது ஸ்டைலில் பனையூரிலேயே தேவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி அதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
சர்ச்சையை கிளப்பிய தவெகவினர்:
இதனையடுத்து தவெக சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அருண்ராஜ் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெகவினர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த நேரில் சென்றனர்.
அப்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் புஸ்ஸி ஆனந்த். இதனையடுத்து தவெக தொண்டர்கள் தவெக தவெக என சத்தமாக கோஷமிட்டனர். அதன் தொடர்ச்சியாக புஸ்ஸி ஆனந்த் தேவர் வாழ்க..தவெக வெல்க என முழக்கமிட்டார். இதனையடுத்து தவெகவினரும் அவரை தொடர்ந்து கோஷமிட்டனர். தேவர் நினைவிடத்திலும் தவெக வெல்க என கோசமிட்டதால் கடுப்பான விழா ஏற்பாட்டாளர்கள் போதும் இறங்குங்க என தவெகவினரை கூறியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இது ஒன்றும் புதிதல்ல:
வழக்கமாக பிற கட்சி நிகழ்ச்சிகளில் தவெக தவெக என கோஷமெழுப்பி தங்கள் பக்கம் கவனம் திருப்புவதை தவெக தொண்டர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஒருபடி மேலே போய், பிரபல யூடியூபர் ஸ்பீடிடம் டிவிகே டிவிகே என முழக்கமிட்டதும் விஜய்..விஜய்.. சி எம் ஆஃப் இந்தியா என கூறி சோசியல் மீடியாவில் ட்ரோலாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேவர் நினைவிடத்தில் தவெக வெல்க என முழக்கமிட்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.