கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா மன்றத்தில் நடைபெற்ற நகழ்ச்சியில் 319 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 156 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 95 குடும்பங்களுக்கு இலவச அடுப்புடன் கூடிய எரிவாயு இணைப்பு, 142 குடும்பங்களுக்கு அத்தியவசிய சமையல் பாத்திரங்கள் மற்றும் ஆடைகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தலைமையில் வழங்கினார்கள். 




இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை பொருத்தவரை அனைவருக்கும் சமமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து திட்டங்களையும் வழங்கி வருகிறார்கள். கடந்த காலங்களில் இலங்கை அகதிகள் முகாம் என்று இருந்ததை தற்போது இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று மாற்றி நமக்கான அங்கீகாரத்தை வழங்கி தமிழ் இனத்தை பாதுகாக்க கூடிய வகையில் நல்லாட்சி நடத்தி வருபவர் நமது தமிழக முதல்வர் அவர்கள். அதேபோல் கடந்த காலங்களில் யாருக்கெல்லாம் விடுபட்டு உள்ளதோ அவர்களை எல்லாம் கணக்கெடுத்து அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நிதியாண்டில் முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு தடுப்பணைகள், அரசு வேளாண் கல்லூரி, சிப்காட் தொழிற்சாலைகள் என பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளார்கள். கடந்த காலங்களில் மின் மிகை மாநிலம் என்று சொல்லிக்கொண்டு தமிழகம் முழுவதும் இலவச மின் இணைப்பு கேட்டு 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்த சூழல் இருந்தது. 




ஆனால், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முதல்வர் வழங்கியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் பல்வேறு சேவைகள் மாவட்ட நிர்வாகத்தால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கி அதன் மூலம் அடையாள அட்டை உதவித்தொகை வேலைவாய்ப்பு உள்ளிட்ட அவர்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அவர்கள் இல்லங்களுக்கு சென்று கேட்டறிந்து நிறைவேற்றி வைப்பதற்காக நேற்று சர்வே எடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.




அதேபோல் முதல்வர் அவர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள்பல்வேறு தொழில் செய்வதற்காக வாங்கிய ரூ. 2800 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். யாருக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை அனைத்தையும் கோரிக்கையாக வழங்கினால் அதை அரசிடம் எடுத்துச் சொல்லி அதற்கான நிதி ஆதாரத்தை பெற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கப்படும். அந்த வகையில்தான் முதல்வர் அவர்களின் அரசு செயல்பட்டு கொண்டு உள்ளது. நூற்றாண்டு கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. குளித்தலை காவிரி ஆற்றுப் பகுதியில் ரூ.750 கோடி மதிப்பில் கதவணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நெரூர் பகுதியில் ரூ.700 கோடி மதிப்பில் கதவணை கட்டப்பட உள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுவதும் 6 தடுப்பணைகள் அறிவிக்கப்பட்டது அதில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு தடுப்பணைகள் பெறப்பட்டு உள்ளது என தெரிவித்தார்கள்.




முன்னதாக கிருஷ்ணராயபுரம் வட்டம், செங்கல் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை பணியையும், லாலாபேட்டை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை பணியையும், கொசூர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிட்டில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை பணியை ஆக மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகளை துவக்கி வைத்தார். குளித்தலை வட்டம் அய்யனேரி பகுதியில் ரூ.40.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தையும், அய்யர்மலை பகுதியில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய துணை சுகாதார நிலையம் கட்டிடத்தினை மொத்தம் ரூ.70.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்துவைத்தார். தொடர்ந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பெருநிறுவனங்களின் (புலியூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை) சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து ஆக்சிஜன் உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கியதை திறந்து வைத்து பார்வையிட்டார்.