விவசாயமும் நாட்டின் முன்னேற்றமும்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயம் தான் முக்கிய ஆணிவேராக இருக்கும். எனவே விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறார்கள். அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நேரடி நிதி உதவியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர்களுக்கு இழப்புகளுக்கு காப்பீடு மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் போன்ற நுட்பங்களுக்கு உதவி செய்து வருகிறது. சூரிய சக்தி மூலம் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் இறைக்கும் வசதிகளை வழங்குகிறது. பம்புசெட் மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

விவசாயிகளுக்கு மின் இணைப்பு

வயதான காலத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இது போல பல திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில் விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு 5 HP மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, மின் வாரியத்திற்கு ஆகும் செலவை அரசு மானியமாக வழங்குகிறது. சில பகுதிகளில், மின் கட்டணத்தைச் சரியாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு 10% வரை கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் பல வருடங்கள் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது. அரசு அறிவிப்பு வெளியிட்டாலும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமல் தட்கல் போன்ற திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சாதாரண பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பிற்காக சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர். இதனையடுத்து இந்த விவசாயிகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின் இணைப்புகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

33,975 விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு

தற்போது வரை 2.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக 50ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு  மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளுக்கான ஒப்புதலை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு வழங்கியது. இதனையடுத்து காத்திருப்போர் பட்டியலில் முன்னிலையில் உள்ள 33,975 விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.