தமிழக அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரும், மு. க. ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி நான்கு வருடங்களுக்குள் அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதிக்கு அதானியின் மகன் பாராட்டு:
இந்த நிலையில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதிக்கு இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானியின் மகன் கரண் அதானி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
துணை முதல்வர் பதவிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை உங்களை உண்மையிலேயே தனித்து நிற்க வைத்துள்ளன. மேலும் உங்கள் தொலைநோக்கு பார்வை மாநிலத்தை இன்னும் பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சரவை அமைக்கப்பட்டபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படவில்லை, சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடர்ந்தார்.
உதயநிதியின் அரசியல் பயணம்:
இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட அவருக்கு, இளைஞர் மற்று விளையாட்டு துறை அமைச்சராக பதவி பிராமாணம் எடுத்துக் கொண்டு, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில தினங்களாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட போகிறது என்ற தகவல் வெளியானது. மேலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட போகிறது எனவும் தகவல் வெளியானது.
இந்த தருணத்தில்தான், நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்தே அறிவிப்பு வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதற்கு ஒப்பதல் அளித்து உள்ளதாகவும் , அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.