தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 8 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதன்படி, மருத்துவ கல்வி இயக்குனராக தேர்வுக்குழு செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் சாந்திமலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி பணியிட மாற்றப்பட்டு, மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி பணியிடம் மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் சுகந்தி ராஜகுமாரி பணியிடம் மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருவாசகமணி பணியிடம் மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரியின் புதிய முதல்வர்களாக பொறுப்பேற்க உள்ள இவர்களே, அந்த மருத்துவமனையின் டீனாகவும் செயல்பட உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பணியிட மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.